புதுடில்லி:
கைதாவாரா... அவரா... கைதாவாரா... என்று அரசியல் வட்டாரங்கள் பரபரத்து கிடக்கின்றன. இந்த செய்தியால்...
யார் கைது ஆவார்.. அவர் யார் என்று தெரியுங்களா? முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்தான் கைது செய்யப்படலாம். இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல்தான் அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளன.

2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அடபோங்கப்பா...என்ற ரீதியில் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார் கார்த்தி சிதம்பரம். அதுமட்டுமா... சம்மனுக்கு எதிராகவும் அவர் கேள்வி எழுப்பவே பெரும் சர்ச்சை எழுந்தது.
அப்படி என்ன கேள்வி கேட்டார் தெரியுங்களா? நான் என்ன குற்றம் செய்தேன்? என்று கேட்டுள்ளார். தனது கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளித்த பிறகு நல்ல முடிவை எடுக்க உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து சம்மன்களை தவிர்த்து வருவதால் கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்குவங்க மாநிலம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கும் சமீபத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பி உள்ளது.