'மெரினா' திரைப்படத்தின் மூலம் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு, தமிழ் சினிமாவில் மார்க்கட் அந்தஸ்தை உயர்த்திய திரைப்படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த படத்தை இயக்கிய பொன்ராம் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை உருவாக்கினார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார்.
இதுகுறித்த அதிகார பூர்வ தகவலை இயக்குனர் பொன்ராம் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பை வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.