புதுடில்லி:
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால்... கிடைக்கும் பரிசு இதுதானோ... என்று அனைவரையும் நொந்து போக செய்துள்ளது இந்த விவகாரம். என்ன தெரியுங்களா?


மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக நாரதா இணையதள பத்திரிகை நிர்வாகியை டில்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்த சம்பவம்தான் தற்போதைய பரபரப்புக்கு காரணமாகி உள்ளது. 


மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங். ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். கடந்த மே மாதம் இம்மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு முன்பு தலைநகர் கோல்கட்டாவில் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானது ஞாபகம் வருகிறதா. அதே... அதேதான்... இதை வெளிப்படுத்தியது '' நாரதா இணையதள'' பத்திரிகை.


ஸ்டிங் ஆபரேசன் மூலம் இந்த லஞ்ச வீடியோவை அம்பலப்படுத்தி இணையதளத்திலும் வெளியிட்டது. இந்நிலையில் மீண்டும் திரிணமுல் காங்., ஆட்சி அமைக்க லஞ்ச வீடியோவில் சிக்கிய அமைச்சர் சோவன் சாட்டோபாத்யாயாவின் மனைவி, நாரதா இணையதள பத்திரிகை ஆசிரியரும், தலைமை நிர்வாகியுமான சாமுவேல் மாத்யூ மீது போலீசில் புகார் செய்ய அப்புறம் என்ன வழக்கம் போல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்நிலையில் நேற்று இரவு இணையதள செய்தி ஆசிரியர் சாமுவேல் மாத்யூ அமெரிக்காவிற்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சாமுவேல் மாத்யூவை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த கைதுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: