விபரீத அரசியல் விளம்பரத்திற்காக பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ஊரடங்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருப்பதே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்பதால் மத்திய - மாநில அரசுகள் இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ள 40 நாள் ஊரடங்கை மதித்து, பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை - மதுரை - கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் 'முழுமையான ஊரடங்கு' என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, பொதுமக்களை பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளாக்கியது.

 

நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசர ஆத்திரத்திலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று (ஏப்ரல் 25) மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து, அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்துவந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த் தொற்றுப் பரவல் குறித்த சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும். ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அதில் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலான நான்கு நாட்கள் 'முழு ஊரடங்கு' என 24-ம் தேதி மாலையில் அறிவிக்கப்பட்டதால், இத்தனை நாட்களாக அரசு இயந்திரம், 'அரைகுறை ஊரடங்கை', 'கட்டுப் படுத்தப்படாத ஊரடங்கை' பின்பற்றியதா என்ற பெரும் சந்தேகத்துடன், இடையில் உள்ள ஒரு நாளான ஏப்ரல் 25 அன்று, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு விரைந்து வெளியே வருவது இயல்பான ஒன்றுதான். 

 

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்து அறிவிக்கும் முடிவுகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்பதை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த காலக்கட்டங்களில், மக்களின் தேவைகள் - நலன்கள் கருதி, மக்களை முதலில் மனரீதியாகத் தயார் செய்து, அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். 'முழு ஊரடங்கு' நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 - ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலைவரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன். பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்துடன் "மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்"என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன 'டாக்டர்' எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது, அவரது முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தையே காட்டியது. அதனால், மக்கள் பதற்றமடைந்து, தேவையான பொருள்கள் கிடைக்குமோ தீர்ந்துவிடுமோ என்ற கவலையில், நேற்று காலையிலேயே கடைகள் முன்பாகக் குவிந்துவிட்டனர். காய்கறி - மளிகைப் பொருட்கள் - பால் விற்பனையகம் - இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை உள்ள பகுதிகள் அனைத்திலும் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகிவிட்டது.

మరింత సమాచారం తెలుసుకోండి: