சென்னை:
சுவாதி வழக்கில் கைதாகி சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று மாலை, சென்னை புழல் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
.jpeg)
அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்தது. ஆனால் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்து ராம்குமாரின் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும். பிரேத பரிசோதனையின் போது, ராம்குமார் தரப்பு டாக்டரையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை மதியத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனால் ராம்குமார் தற்கொலை பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ராம்குமார் இறந்து விட்டதால் சுவாதி கொலை வழக்கு அப்படியே நின்று போய்விட்டது. இதனால் இதன் பின்னணியில் வேறு ஒரு பிரச்னை உள்ளது என்ற பலரின் தகவல்கள் என்னவாகும் என்று தெரியவில்லை.
இதற்கிடையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே ராம்குமாரின் உடலை வாங்குவோம். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று ராம்குமாரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.