சென்னை:
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பிலிருந்து சிலர் உடனிருக்க வேண்டும் என்று அவரது வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், இந்த மனுவை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாகவும், உயர்நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மதியம் மனுவை விசாரித்த நீதிபதிகள், சில நிபந்தனைகளோடு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர். 4 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக படம் பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு, ராம்குமார் உடல் இன்று (20ம் தேதி) பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.