கபாலி... கபாலிடா... மந்திர சொல் போல் உலக ரசிகர்களை கட்டி போட்டு கலங்க அடித்த பெயர். பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை சொல்லும் வார்த்தையே கபாலிடாதான்... அந்தளவிற்கு படத்தின் பெயரை உச்சரிக்க வைத்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது அவரால் மட்டுமே முடியும் என்பதை மறுபடியும் காட்டி விட்டார். சறுக்கி விழுந்தாலும் எழுந்து ஓடும் குதிரை என்பதை இப்போது ராக்கெட் வேகத்தில் சொல்லாமல் சொல்லியுள்ளார். 


வேதனை கொடுத்த லிங்கா...

Displaying 6.jpgDisplaying 6.jpg


லிங்கா படத்தில் ஏற்பட்ட சோதனை, வேதனையால் மனதளவில் நொந்து போய் கிடந்தார் ரஜினி. ஒரு கும்பல் படுத்திய பாடு அவரால் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டது. பாபா படத்தில் சந்தித்த வேதனையை விட இந்த லிங்கா அதிக வேதனையை கொடுத்தது. இருப்பினும் யார் அவர்? சூப்பர் ஸ்டார் ஆச்சோ... வீழ்ந்தால் எழாமல் போக யானையா... குதிரையாச்சே... எழுந்தார் பாருங்கள் இளமை துள்ளலுடன். கோர்த்தார் கைகளை கபாலி டீமுடன். ரஜினி செய்வதற்கு முன்புதான் யோசிப்பார். செய்ய ஆரம்பித்தால் ராக்கெட் வேகம்தான்.


அவரது இளைய மகள் சௌந்தர்யாவிற்கு அறிமுகமான இளம் இயக்குனர் ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தை பாராட்டிய ரஜினி... அவருக்கு கொடுத்தார் ஓர் இன்ப அதிர்ச்சி. நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்பதுதான் அது. இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து படம் செய்த காலம் எல்லாம் மலையேறி போய் இருந்தது ரஜினிக்கு என்றால் அது மிகையில்லை. 



ஆனால் தற்போது ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்தார். ரஞ்சித் கூறிய "டான்" கதை தனக்கு பொறுத்தமாக இருக்கும் என்றவர் எடுத்த முடிவுதான் இன்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கபாலி. இயக்குனர் சரி... தயாரிப்பாளர் யார்?




வந்து சேர்ந்தார் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை வழங்கிய தயாரிப்பாளர் தாணு. விநியோகஸ்தராக ரஜினி படங்களை வாங்கி இருந்தாலும் முதல்முறையாக இவரும் ரஜினியுடன் கைகோர்த்தார்.  பட பூஜைகள் முடிந்தவுடன் படக்குழு பறந்தது மலேசியாவிற்கு.


அங்கு ரஜினியை பார்க்க கூடிய கூட்டம் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்து ரசிகர்களை ஏங்க வைத்தது. ரசிகர்கள் மொய்த்தனர்.  யாரையும் ரஜினி ஒதுக்கவில்லை. ரசிகர்களுடன் அவர் எடுத்த படங்கள் இணையதளத்தில் வெளியாக, வெளியாக படத்திற்காக எதிர்பார்ப்பின் அளவு கோலும் உயர்ந்தது. 



ரஜினி இப்பொழுது போட்டுள்ள கூட்டணி இளமை கூட்டணியாக அல்லவா இருந்தது. இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை அனைவரும் ரஜினி படத்திற்கு புதியவர்கள்... இளையவர்கள். பாட்டு எழுதியவர்களும் அப்படியே... இந்த இளமை ரத்தம் ரஜினிக்கும் தொற்ற படப்பிடிப்பு செம...ஸ்பீடு.... ஸ்பீடுதான். 


கபாலி போஸ்டர் வெளியாக ரசிகர்கள் கொண்டாட்டத்தின் எல்லைக்கே போய்விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியே சென்று கொண்டிருந்த படத்தின் ஒவ்வொரு தகவல்களும் பெரிய எதிர்பார்ப்பாக மாற... கதை இதுதான்... அதுதான் என்று பல யூகங்களும் ரவுண்டு கட்டியது தனிக்கதை.


ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாத கபாலி டீம் காரியமே கண்ணாக இருந்தனர். 


டீசர் போட்ட போடும்... உடைத்த சாதனைகளும்:



வந்தது அந்த நாள்... மே 1ம் தேதியை சாதனைகளின் நாளாக மாற்றிக் கொண்டார் கபாலி... ஆம். டீசர் வெளியானது அன்றுதான். டீசர் வருகிறது என்ற தகவலை அடுத்து காலை முதல் இணையத்திலேயே ரவுண்டு கட்டினர் ரசிகர்கள். சொன்னபடி வெளியானது டீசர்... 1 நிமிடமும் சில விநாடிகளும் ஓடிய அந்த டீசர் இதுவரை இல்லாத அளவிற்கு பார்த்தவர்களின் எண்ணிக்கையையும், லைக்குகளின் எண்ணிக்கையையும் குவித்தது கோடி கணக்கில்.


மற்ற படங்களின் முந்தைய சாதனைகள் தவிடு பொடியானது. அந்த டீசரில் ரஜினி கூறும் மகிழ்ச்சி... கபாலிடா வார்த்தைகள் பெரும் டிரெண்ட் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். ரசிகர்கள் கொண்டாடினர்... கொண்டாடினர் அப்படி ஒரு கொண்டாட்டத்தை கொண்டாடினர். இன்னும் கொண்டாடி கொண்டுதான் உள்ளனர் என்று சொல்ல வேண்டும்.




விண்ணையும், பூமியையும் தனதாக்கிய "கபாலி":

டீசருக்கு பின்னர்தான் இந்த படத்தின் தளம் வேறு இடத்திற்கு இடம் மாறியது. உலகமே எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த படம் மாறியது என்றால் மிகையில்லை.. படத்தின் விளம்பரங்கள் பூமியில் பரபரக்க... விண்ணில் நாங்கள் இருக்கிறோம் என்று ஏர்ஏசியா நிறுவனம் களத்தில் குதித்து தங்கள் விமானத்தில் கபாலி பட போஸ்டர்களை ஒட்ட படத்திற்காக புரமோஷன்கள் விண்ணை எட்டி பிரமாண்டமானது.



இப்படியே ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கபாலி விளம்பர புரமோஷன்களில் பங்கெடுக்க ஆரம்பித்தன. தமிழ் படத்தையே வெளியிடாத வெளிநாடுகளிலும் கபாலி இப்போது ரிலீஸ் ஆகிறது. இப்படி ரவுண்டு கட்டி அடிக்கும் கபாலி படம் என்று வெளியாகும்... வெளியாகும் என்று காத்திருந்தனர் எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள்.... அவர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்து சேர்ந்தது


22ம் தேதி... 22ம் தேதி:


'கபாலி' படத்தின் வெளியீட்டுத் தேதி தயாரிப்பாளர் தாணுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


படத்தின் சென்சாருக்குப் பிறகுதான் படத்தின் வெளியீடு பற்றி அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி சென்சார் முடிந்து சிறிது நேரத்திற்கெல்லாம் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 22ம் தேதி படம் ரிலீஸ் என்று


இதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மிகவும்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்போது படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகும் என்பது குறித்தும் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.



இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படாத சில நாடுகளில் கூட படத்தை வெளியிட அங்குள்ள தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். உலகம் முழுவதும் சுமார் 10000 தியேட்டர்களில் படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கி விட்டன. ஏற்கெனவே பல இடங்களில் டிக்கட்டுகள் முன் கூட்டியே விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பெயர் தெரிந்தது... பெயர் தெரிந்தது:



இதற்கிடையில் இந்த படத்தில் ரஜினியின் பெயர் கபாலீஸ்வரன் என்றும், ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தேவின் பெயர் குமுதவள்ளி என்றும் தெரியவந்துள்ளது.  'கபாலி' படம் இதுவரை தமிழ்த் திரையுலகத்தில் உள்ள சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


அதுமட்டுமா? முத்தூட் நிறுவனம் தங்கம், வெள்ளி காசுகளிலும் கபாலி படத்தை பொறித்து விற்பனைக்கு கொண்டு வரப்போகுதாம்... அனைவரும் எதிர்பார்க்கும் கபாலியை நாமும் எதிர்பார்ப்போம்.... வரவேற்போம்... சொல்லாமல் சொல்லி அடிக்க வருகிறார் கபாலி... கபாலிடா....

మరింత సమాచారం తెలుసుకోండి: