1998ஆம் ஆண்டு, சரண் இயக்கத்தில், அஜித்குமார், புதுமுகம் மானு, கரண், கிரீஷ் கர்னாட், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் விவேக் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் காதல் மன்னன்.




வெங்கடேஸ்வராலயம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், சுதீர் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம், இயக்குனர் சரணின் முதல் திரைப்படம் ஆகும். இயக்குனர் சரணுக்கு மட்டும் அல்லாது, இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் கதாநாயகி மாணுவிற்கும் காதல் மன்னன் முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு இருப்பது ஆண்டுகள் ஆகின்றன. 



இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்று, இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்று தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் அஜய் ராஜ். வெங்கட்ப்ரபுவின் சென்னை-600028 படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏழுமலையாக வருவாரே அவரே தான். முன்னொரு காலத்தில் நடிக்க வரும் முன்னர் நடன இயக்குனராக இருந்த அஜய் ராஜிற்கும் காதல் மன்னன் தான் ஒரு முழு நேர நடன இயக்குனராக முதல் திரைப்படம். 
காதல் மன்னனின் இருபதாம் ஆண்டு நினைவாக அவர் வெளியிட்ட தகவல் இதோ: "நான் இந்த சினிமா துறைக்கே புதியவனெனினும், என்னை காதல் மன்னன் படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற வைத்தார் அஜித்.


அன்று முதல் இன்று வரை தான் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்த நிலையிலும், தன்னிலை மாறாமல் என்னோடு இன்றளவும் அதே நட்போடு பழகும் ஒரு மனிதர் தான் அஜித். காதல் மன்னன் திரைப்படத்தின் புகழ் பெற்ற பாடலான "உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே" பாடல் படப்பிடிப்பின் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'புதிய பறவை' திரைப்படத்தின் "எங்கே நிம்மதி" பாடலில் ஆடிய ஒரு நடன அசைவை வைக்கலாம் என்று நினைத்து அஜித்திடம் கூற, அவர் உடனே உற்சாகமாக பண்ணலாம் அஜய் என்றார். உற்சாக மிகுதியில் அந்த நடன அசைவை சரியாக செய்ய வேண்டும் என்ற முயற்சியில் பயிற்சி செய்த அஜித், ஒரே ஷாட்டில் முட்டி போட்டு எழுந்து நின்று அழகாக அந்த நடன அசைவை செய்தார்.



இம்முயற்சியில் அவரது கால்களில் பயங்கரமாக அடிபட்டு அவருக்கு வலித்தது என்றாலும், அதனை பொருட்படுத்தாது சிறப்பாக ஒரு ஷாட்டில் ஓகே செய்தார் அஜித்" என்றார் அஜய் ராஜ். 
காதல் மன்னன் அவ்வாண்டின் முக்கியமான வெற்றிப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித்-சரண் என்ற புதிய கூட்டணி உருவாகி, அமர்க்களம், அட்டகாசம் என வெற்றிகளை குவித்தது. சவால்களை விரும்பி பந்தயம் கட்டும் இளைஞன் ஒருவன் ,திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் மீது காதல் கொள்ள, அந்த காதல் ஜோடி சேர்ந்ததா, என்பதே காதல் மன்னன் படத்தின் கதை. 


మరింత సమాచారం తెలుసుకోండి: