சென்னை:
எனது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் நான் இறந்து விட்டதாக 4 முறை வதந்திகள் பரப்பி உள்ளனர் என்று திமுகவைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை பட்டிமன்றங்களில் கொடி கட்டிப் பறந்த திண்டுக்கல் லியோனி திமுகவில் இணைந்தார். இப்போது அரசியல் மேடைகளில் ஆளும் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுகவிற்காக பிரசாரங்களும் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இறந்துபோய்விட்டதாக அடிக்கடி வதந்திகள் உலா வர ஆரம்பித்தன. இல்லை... நான் உயிருடன் இருக்கிறேன் என்று லியோனி மறுப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில் திடீரென்று புதுக்கோட்டையில் நடந்த சாலை விபத்தில் லியோனி இறந்துவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமான பரவியது.
இதுகுறித்து அறிந்த லியோனி, இது முற்றிலும் தவறான செய்தி. நான் நலமுடன் இருக்கிறேன். ஏற்கனவே 3 முறை இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டது. அரசியல் கூட்டங்களில் பேசுவதினால், என்னுடைய பேச்சை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்று கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்றவை இனி தொடரக் கூடாது என்று தெரிவித்துள்ளார். வதந்தி பரப்புபவர்களே... வேறு வேலையே உங்களுக்கு இல்லையா?