இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் 'வானம் கொட்டடடும்' படத்தின் பாடல்களை சிவா அனந்த் எழுதியுள்ளார். அப்படத்தின் பாடல்கள் எழுதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாவது:-
"'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம் முதல் முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகி இருக்கிறேன்.
கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாக இருந்தது. பாடலாசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், இசையின் மிகப்பெரிய ரசிகன் நான். எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர்கள் சிலர் உள்ளார்கள். அவர்களில் மருதகாசியின் ரசிகன் நான். கண்ணதாசன், வைரமுத்து, உடுமலை நாராயணகவி, 'பாபநாசம்' சிவா ஆகியோரையும் பிடிக்கும். எனக்கு பிடித்த பாடல் வரிகளே அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
'வானம் கொட்டட்டும்' படத்தின் இயக்குநர் தனாவுடன் சிறந்த அனுபவமாக இருந்தது. அப்படத்தில் 'ஈஸி கம் ஈஸி கோ.. ' என்ற பாடலை இயற்றினேன்.
அதில் இரண்டாவது வரி 'கைப்பிடித்து நாம் நடக்க ஒரு உலகம் ஒதுங்கிவிடும் வா வா வா..,
வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்று தழுவிடும் வா வா வா..
ஆகிய வரிகளை எழுதி முடித்ததும் தனாவிற்கும், மணிரத்தினத்திற்கும் அனுப்பினேன், உடனே ஏன் இன்னும் இந்த பாடலை முழுதாக முடிக்கவில்லை என்று மணிரத்தினம் சார் கேட்டார். குறைவான நாட்களில் இப்பாடலை இயற்றி இருந்தாலும் பாடல் நன்றாக வந்திருக்கிறது. 'யாரும் இல்லா காட்டுக்குள்ளே', 'பூவா தலையா' ஆகிய பாடல்கள் இயற்றும் சமயத்தில், இனி பாடல் இயற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதற்கேற்றாற்போல் தனா, மணிரத்தினம் மற்றும் சித்ஸ்ரீராம் ஆகியோர்களின் ஊக்கத்தால் சிறப்பாகவும், சுலபமாகவும் இப்படத்தில் பாடல்களை இயற்ற முடிந்தது.
சித் அவருடைய கோணத்தில் பாடல் வரிகளைக் கொண்டு வந்தார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையை தள்ளிவைத்து புதுவிதமாக இசையை அமைத்தார். 'பூவா? தலையா?' பாடலை ராப் பாணியில் உருவாக்கியிருக்கிறார். அவர் இசையை ஒவ்வொரு பிரிவாக வடிவமைத்த விதம்தான் எனக்கு பாடல் இயற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தோன்ற வைத்தது.
மேலும், 'பூவா? தலையா? ' பாடல் ஒரு இளைஞனை ஊக்குவிக்கும் பாடலாக வந்திருக்கிறது. அதேபோல் ஒரு பாடல் ஆசிரியருக்கு பாடல் இயற்றக் கூடிய படத்தின் அடிப்படையான கருத்து,
பாடல் அமைவதற்கான சூழ்நிலை, யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அதை பிரதிபலிக்கும் விதத்தில் பாடல் வரிகளை இயற்ற வேண்டும். ஒரு பாடலாசிரியருக்கு போதிய இடைவெளியும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே அப்பாடல் வரிகள் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு அது இருந்தது. இந்த படத்தில் எனக்கு பாடல்கள் எழுத உத்வேகம் கொடுத்தது இந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான். சித் ஸ்ரீராமின் இசை இந்தப் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.
click and follow Indiaherald WhatsApp channel