இருக்கும் இடத்தில் இருந்தால்தான் நமக்கு சௌகரியம்... இடத்தை விட்டு வெளியேறினால் இப்படிதான்... கரைக்கு வந்த 8 திமிங்கலங்கள் பரிதாபமாக இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கரை ஒதுங்கிய 8 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். அந்த சம்பவம் போலவே இந்தோனேசியாவில் தற்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.... இறந்தன.


பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய தண்ணீரில் வாழும் விலங்கு திமிங்கலம்தான். இவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.


மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் திமிங்கலங்கள் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஜீஹீ கடற்கரை, ஒடிசா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் திமிங்கலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் மக்களை கண்கலங்க செய்து வருகிறது. 


இப்படித்தான் இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பைலட் வகையிலான 8 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சிறிது நேரத்தில் சுவாசிக்க முடியாமல் அவை திணறின. இந்த திமிங்கிலங்களை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் மீனவர்களும், அரசு அதிகாரிகளும் இரவு முழுவதும் படாதபாடு பட்டனர். 


இருப்பினும் காலையில் 8 திமிங்கலங்களும் கரையில் இறந்து கிடந்தன. இச்சம்பவம் மக்களை கண்கலங்க செய்துள்ளது. என்னத்தான் பெரிய சைஸ் உயிராக இருந்தாலும் மூச்சுக்கு காற்று இல்லாவிடில் வெறும் கூடுதான்...



మరింత సమాచారం తెలుసుకోండి: