பெங்களூரு:
மீண்டும் மழையா... பெங்களூரு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். காரணம் இதுதான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூருவில் இன்று மதியம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதுதான் காரணம். இதனால் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை முதல் விடாமல் மழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் நிரம்பின. வியாழக்கிழமை இரவு 4 செ.மீ வரை மழை பெய்ததால் மடிவாளா, ஹீலிமாவு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து அங்கு வசித்து வந்தவர்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மழை நின்றது. இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்டு வந்தது. இதனால் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியது.
ஆனால் மீண்டும் இன்று மதியம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மழை தொடர்ந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது