சென்னை:
பந்த்... பந்த்... அமைதியான முறையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டம் துவங்கியது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் கடைகளில் உடைத்து நொறுக்கப்பட்டன. தமிழக பஸ்களை தீவைத்து எரித்தனர் கன்னட அமைப்பினர்.
இதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த முழு கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் துவங்கியது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரி விவசாயிகள் களத்தில் குதித்துள்ளனர்.
ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி வரை 4,600 பெட்ரோல் பங்க்கள் மூடப்படுகிறது. முழு அடைப்பின் காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு பஸ்கள், மின்சார, மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக உட்பட பல அமைப்புகளும் முழு ஆதரவு தந்துள்ளன. தமிழகத்தில் பந்த் எவ்வித கலவரமும் இன்றி அமைதியாக நடந்து வருகிறது.