அலெபோ:
ரத்தம், மண், புழுதி என்ற கோலத்தில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் அமர்ந்திருக்கும் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களை கண்ணீருக்கு உள்ளாக்கி உள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில் நடந்த வான் தாக்குதலில் இடிந்து தரை மட்டமான கட்டடம் ஒன்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிரியாவின் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இங்கு குவாட்ரிஜ் என்ற பகுதி மீது நடந்த வான் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதில்தான் ஒரு சோகம் நடந்தது.
மீட்புபணிகளின் போது 5 வயது சிறுவன் ஒருவன் கட்டட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டான். தலையில் ரத்தக்காயம், உடல் முழுவதும் மண் தூசியும் படிந்திருந்தன. சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அவனை அமர வைத்தனர்.
அப்போது நடந்தது அறியாது அந்த சிறுவன் தனது தலையில் வடியும் ரத்தத்தை கையால் துடைக்கும் காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. இது வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தீவிரவாதத்தின் கரங்கள் அப்பாவி மக்களை எப்படி எல்லாம் வாட்டுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகி பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்து வருகிறது.