தமிழகத்தில் நோய் கட்டுப்பாடு பகுதி உள்பட எந்தெந்த பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் அப்படியே தொடர்கின்றன என்பது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நிலை குறித்து முடிவுகளை எடுக்க இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.

 

அதன்படி சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அவை வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறுஉத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும், அவை பின்வருமாறு: 

 

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். 

 

2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். 

 

3. திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள். 

 

4. அனைத்து வகையான சமய, சமுதாய,அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

 

5, பொது மக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து 

 

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, 

 

7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து 

 

8. மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து 

 

9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல் ரிசார்ட்டுகள். 

 

10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. 

 

11. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும். 

 

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி மே 6-ஆம் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுப்பட்டுள்ளார்கள். நோய்த் தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

మరింత సమాచారం తెలుసుకోండి: