சென்னை:
"ஆனந்த யாழை மீட்டுகிறாள்..." என்று அனைவரையும் அழகான வார்த்தைகளால் கட்டிப்போட்ட இலக்கியமும், ரசனையும் மிகுந்த பாடல்களை தந்த தமிழ் சினிமாவின் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் உடல்நலப்பாதிப்பால் நேற்று  காலமானார். அவரது மறைவு கோலிவுட் வட்டாரத்தை ஒரு உலுக்கு உலுக்கி உள்ளது.


தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வந்தவர் நா.முத்துக்குமார் (41). காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு சினிமா மீது மோகம்... நாட்டம்... இதற்காக தன் ஊரை விட்டு வந்தவர் இயக்குனராகத்தான் விரும்பினார். இதற்காக பல சிரமங்களுக்க இடையில் இவர் சென்று அடைந்த இடம்... பாலுமகேந்திரா என்ற ஜீனியசின் பட்டறைக்குதான். நான்கு வருடங்கள் பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய நா.முத்துக்குமார் சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம்தான் தன் கலையுலகப்பயணத்தில் பாடலாசிரியராக தன் அடிச்சுவட்டை பதிக்க ஆரம்பித்தார். அறிமுகம்... பாடலாசிரியர் என்று வந்து விட்டது. இனி இதுதான் தன் பாதை என்று முடிவு செய்தவருக்கு பாடல்கள் எழுவதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு பிறகுதான்.

Displaying 1.jpg


காலங்களின் மாற்றங்கள்... அற்புதமான கவிஞரை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்தது என்றே கூறலாம். இவரது பேனா எழுதிய... இல்லை... செதுக்கிய பாடல்கள் இதுவரை 1500-க்கும் அதிகமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Displaying 2.jpg


பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இவரது நெஞ்சை மகிழ்வித்த பாடல்களை பாடி நடிக்காத நடிகர்கள் ஒரு சிலரே என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த 2012- ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 103 பாடல்களுக்கு பாடல் எழுதிய பெருமை என்பது இவரை மட்டுமே சேரும். அந்தளவிற்கு கோலிவுட்டை தனது மயக்கும் வார்த்தைகளால் கட்டிப்போட்டு இருந்தார் நா.முத்துக்குமார்.


பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டுக் கொடுத்தால் கூட அதற்கும் எட்டே நிமிடத்தில் பாட்டெழுதி கொடுத்து அசத்தும் அசாத்திய ஆற்றல் படைத்தவராக இருந்தார் நா.முத்துக்குமார். பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்ற பழமொழிக்கு அப்பாற்பட்டவர் அவர். சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா என்ற வெகுகால சர்ச்சைக்கு தன் எழுத்துக்களால் பதிலடி கொடுத்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் நா.முத்துக்குமாரும் ஒருவர் என்றால் மிகையில்லை.



ஆனந்த யாழை மீட்டுகிறாள்... ‘தங்கமீன்கள்’ மற்றும் ‘சைவம்’ ஆகிய படங்களுக்காக 2 முறை தேசிய விருதும் வாங்கி இவர் மேலும் மேலும் தன் பாடல்களால் ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.


தேசிய விருது பெற்றபின்னர் இவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் சுயம்பு இல்லை. என்னை வளர்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக காஞ்சி இலக்கிய வட்ட நாராயணன், கவிஞர் அறிவுமதி அண்ணன், இயக்குநர் சீமான் அண்ணன், இயக்குனர் அருண்மொழி, பாலுமகேந்திரா, பட்டுக்கோட்டை பிரபாகர், பத்திரிகைத் துறையில் நக்கீரன் கோபால், பெ. கருணாகரன், என் முதல் பாட்டுக்கு இசையமைத்த தேவா, இன்றுவரை என்னைத் தொடர்ந்து பாடல் எழுத வைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா என்று தன் நன்றியை தன்னை வளர்த்த அனைவருக்கும் தெரிவித்துக் கொண்ட நல்ல உள்ளம் கொண்ட கவிஞன்.


இப்படி அனைவரின் மனதிலும் புகுந்து தனது வைரவரிகளால் தாலாட்டிய அற்புத கலைஞனை காலன் என்ற கொடூரன் தன் வசமாக்கி கொண்டுவிட்டான். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நா.முத்துக்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது. பொய் என்று வந்துவிட வேண்டும் நினைக்காத இதயங்கள் இருக்கவே முடியாது. கவிஞரே இன்று நீங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் காலம் இருக்கும் வரை உமது எழுத்தும், பாடலும் எங்கள் அனைவரின் உள்ளங்களிலும் ஒலித்துக் கொண்டு இருக்கும்... கண்ணீர் துளிகளுடன்... உமது ஆத்மா அமைதியால் ஆழ்ந்துறங்க... பிரார்த்திக்கிறோம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: