ராசிபுரம்:
தமிழ்நாட்டில் தற்போது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகள் சிக்கி வருகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இது. 


நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சீரங்காயி. இவர்களது மகள் சரளாதேவி (39). பல் டாக்டர்.


இவர் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் ராசிபுரத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.


இன்று காலை வழக்கம் போல் சரளாதேவி தனது மொபட்டில் ராசிபுரம் புதிய பஸ்ஸ்டாண்டுக்கு வந்தார். பின்னர் மொபட்டை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு பஸ் ஏறுவதற்காக நடந்து வந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.


அப்போது விர்ரென்று வேகமாக வந்த ஆம்னி வேனில் இருந்த 4 பேர் சரளாதேவியை கடத்தி சென்றனர். காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியம் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டி.எஸ்.பி ராஜீ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜா ரணவீரன், சசிகுமார், பாலமுருகன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


இவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்திற்கு பின்னணியில் பாபு என்பவர் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த பாபு, சரளாதேவியை பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாபு தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சரளாதேவியை கடத்தியது தெரிய வந்தது.


தொடர்ந்து அவர்களின் செல்போன்கள் இயங்கிய டவரை வைத்து இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று கடத்தப்பட்ட பெண் டாக்டரை மீட்டனர்.
சம்பவம் நடந்து 3 மணி நேரத்தில் பெண் டாக்டரை மீட்ட போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தற்போது பாபு மற்றும் கடத்தலுக்கு உடந்ததையாக இருந்தவர்கள் போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். 


Find out more: