ராமநாதபுரம்:
தனித்துதான்... தனித்துதான் போட்டியிட உள்ளோம் என்று முஷ்டி முறுக்கி உள்ளார் சீமான்.
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். யாருடனும் கூட்டணி இல்லை என்று உறுதியாக சொல்லியுள்ளார் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான், அமீர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரடப்பட்ட வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு ஆஜராகினர்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
காவிரி பிரச்னையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்னையிலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டியுள்ளது.
இனிமேலாவது தமிழக மக்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய மக்களாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே களம் காண்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் கண்டது குறிப்பிடத்தக்கது.