பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல் பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே கேப்டன் அம்ரிந்தர் சிங் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் நான்கு பேர் அமைச்சரவையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  நிறைய பேருக்கு அமைச்சரவைப் பொறுப்பை மாற்றிக் கொடுத்துள்ளார். இதில் உள்ளாட்சித் துறை எனும் முக்கிய பொறுப்பை வகித்த நவ்ஜோத் சிங் சித்து தற்போது எரிசக்தி மற்றும் மாற்று எரிசக்தித்துறை அமைச்சராக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருந்த பிளவு இன்று அமைச்சரவைக் கூட்டத்தை சித்து புறக்கணித்ததை அடுத்து விரிசல் அதிகமாகியது. 

அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த பிறகு செய்தியாளர் சந்திப்பை நடத்திய சித்து, தேர்தல் தோல்விக்கு பஞ்சாப் அமைச்சரவையில் தன்னை மட்டுமே பொறுப்பாளியாக ஆக்குகின்றனர். இதை ஒருகாலும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினார்.

முன்னதாக எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சித்துவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து அமைச்சரவையிலிருந்து அவரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் எனக் கூறினார்.

தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு பஞ்சாப் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறியதாக கட்சி வட்டாரங்கள் பரபரத்துக் கிடக்கின்றன.

சமீபத்தில் கேப்டன் அம்ரிந்தர் சிங்கும் நவ்ஜோத் சிங் சித்துவை உள்ளாட்சித் துறையிலிருந்து மாற்ற உள்ளதாக கூறியிருந்தார். அதற்கு காரணமாக தேர்தல் தோல்விக்கு அவர் நிர்வகித்த உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் தான் எனவும் விளாசியிருந்தார்.

சித்து இலாகா மாற்றத்தை ஏற்றுக் கொண்டு தொடருவாரா இல்லை வெடித்துக் கிளம்புவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.

మరింత సమాచారం తెలుసుకోండి: