சென்னை:
சென்னையை மட்டுமின்றி தமிழகத்தை பெரும் உலுக்கு உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னை தானே கழுத்தில் கத்தியால் அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் கடந்த வாரம்  வெள்ளிக்கிழமை காலை நடந்த சம்பவம் தமிழகத்தை கிடுகிடுக்க வைத்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி ஒரு மர்ம நபரால் அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்டார். அவர் ரத்தவெள்ளத்தில் மிதந்து இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரத்தவெள்ளத்தில் இறந்த போன சுவாதி


பல்வேறு யூகங்கள், பல்வேறு சர்ச்சைகளுக்க மத்தியில் இந்த படுகொலை சம்பவத்தில் கொலையாளி யார் என்பதில் படு குழப்பம் நிலவி வந்த நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவியில் பதிவான வீடியோவில் கொலையாளியின் உருவம் பதிவானது தெரியவந்தது. 


இந்த கொலை வழக்கு சென்னை போலீசாரை வெகுவாக டிரில் எடுத்தது என்பதுதான் உண்மை. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள், சமூக வலைதளங்கள் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கின. போலீசாரை விரட்டி, விரட்டி கண்டனங்கள் தொடர்ந்தபடி இருந்தன. பின்னர் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் இரவு பகலாக தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் கொலையாளி பற்றி எவ்வித தகவலும் கிடைக்காத நிலை நீடித்து வந்தது.


இந்நிலையில் திடீர் திருப்பமாக, கொலையில் தொடர்புடைய செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். 


தென்காசி அருகே தேன்பொத்தை மீனாட்சி புரம் கிராமத்தில் ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே ராம்குமார் போலீசாரிடம் சிக்கிக் கொள்ள கூடாது என்பதற்காக தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். விரைந்து செயல்பட்ட போலீசார் செங்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் ராம்குமரை சிகிச்சைக்காக சேர்த்தனர். 


பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புகொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இக் கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் யார் என்ற விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை.


ஒரு தலைக்காதல் காரணமாக இது நடந்ததா? அல்லது வேறு யாருக்காவது இவர் கொலையாளி ஆனாரா என்பது இனிமேல்தான் தெரியவரும். பொறியியல் பட்டதாரியான ராம்குமார் பார்ட்டைம்மாக ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றி சூளைமேட்டில் ஒரு மேன்ஷனில் தங்கி வேலை தேடி வந்தார் என்ற விபரங்களும் வெளியாகி உள்ளது. இது குறித்த மேல்தகவல்கள் இனிதான் வெளிவரும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: