புதுடில்லி:
கணவர் மீது இருக்கும் கோபத்தை தன் மீது காட்டிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையால் டில்லி முதல்வரின் மனைவி தனது மத்திய அரசு பணியிலிருந்து வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டார் என்று சொல்றாங்க... சொல்றாங்க...
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசிற்கு மனு அனுப்ப அவரது விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 15ம் தேதி முதல் சுனிதாவுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த மனுவை பரிசீலித்து அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக தன்னை மத்திய அரசு பழிவாங்கலாம் என்ற அச்சத்தில் சுனிதா கெஜ்ரிவால் விருப்ப ஓய்வு பெற்று விலகி உள்ளதாக கூறப்படுகிறது. டில்லி முதல்வராக உள்ள கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கும் ஏழரை பொறுத்தமாக உள்ளது. தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்னை. இந்த ஆடு புலி ஆட்டத்தில் தன்னை பலிகடா ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்று விஆர்எஸ் வாங்கி விட்டாராம். என்னம்மோ... போங்க...