சென்னை:
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கபாலி படத்தின் ரசிகர்களுக்கான முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் நேற்று திரையிடப்பட்டது. அதேபோல் இன்று காலை சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை காட்சி 5.30 மணிக்கு தொடங்கப்பட்டது. ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.


உலகம் முழுவதும் கபாலி ஜீரம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாள் எந்த நாள் என்று காத்திருந்த ரசிகர்கள் இன்று வெளியாகும் கபாலி படத்திற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடமெல்லாம் கபாலி குறித்த பேச்சுதான். 


இந்நிலையில் ரஜினியின் கபாலி படத்தின் முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் தொடங்கியது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு (அங்கு இரவு 9 ) ரசிகர்களுக்கான முதல் ஷோ மலேசியாவில் திரையிடப்பட்டது.


பெரும் ஆரவாரத்துடன் ரசிகர்கள் தியேட்டர்களை சுற்றுலாத்தலமாக்கி விட்டனர். கபாலி படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக வந்தனர. குழந்தைகள் பலர் கபாலி டி-ஷர்ட் அணிந்து அசத்தினர். படத்தின் காட்சிகளின் போது ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டர்களை குலுக்கி எடுத்து விட்டது. ரசிகர்களுக்கான முதல் ஷோ இது என்பது குறிப்பிடத்தக்கது.


மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் ப்ரீமியர் காட்சி நடந்தது. இது வெளிநாட்டில்... நம் தமிழகத்தில் இன்று காலை 5.30 தொடங்கியது. இதற்காக நள்ளிரவு முதலே திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். தேங்காய் உடைப்பது, சூடம் கொளுத்துவது என தியேட்டர்களை கலக்கி எடுத்து விட்டனர். காட்சி ஆரம்பித்த போது ரஜினியின் ஆரம்ப காட்சிகளுக்கு விண்ணுக்கு மேல் விசில் சத்தம் பறந்தது.


Find out more: